உதைபந்து

Wednesday, February 22, 2012

நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி ! இப்போ கேக்கவா வேணும்? பாகம் 1


நமது வாழ்க்கையில் நாம் உண்மையென்று நம்பி கடைப்பிடித்த சில விடயங்கள், இப்போது நினைக்கையில் சிரிப்பை வரவழைக்கும். அது எப்போதும் பசுமையான நினைவுகளாகவே இருக்கும்.எனது ஆரம்பகால கிரிக்கட் விளையாட்டுக்கள் கூட அந்த ரகம் தான். இவைதான் விதிகள் என்று நாங்கள் கடைப்பிடித்த கிரிக்கட் விதிகள் வேடிக்கையானவை, இப்போது நினைக்கயிலும் அந்த நாட்கள் மீளாதா என ஏங்க வைப்பவை. எனது நண்பர்களிடம் விசாரித்ததில் அவர்களும் இம்மாதிரியான விதிகளை கொண்டு ஆடியவர்களாகவே இருக்கிறார்கள்.



இந்த பதிவின் நோக்கம் அவ்வாறாக நாங்கள் கடைப்பிடித்த எங்களது கிரிக்கட் விதிகளை சொல்லி, அதன் மூலம் நீங்கள் சிருவயதில் ஆடிய அந்த விருத்தறியா விளையாட்டு விதிகளின் பசுமையான நினைவுகளை மீள கொண்டு வருவதே.

அப்போது எனக்கு வயது ஏழு.1996 உலக கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியவுடன் தான் எங்களது கிராமத்தில் கிரிக்கட் காய்ச்சல் ஆரம்பமானது.ஏன் முழு இலங்கைக்குமே அதன் பின்புதான் கிரிக்கட் ஒரு மதமாய் மாறியது எனலாம். எனது கிராமம் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 25 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் அமிந்திருந்தது. அது போக உள்நாட்டு யுத்த வேளைகளில் நாங்கள் ராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் இருந்தோம். எனவே அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துமே மட்டுப்படுத்தப்பட்ட வரவுதான். எனவே ஒழுங்கான கிரிக்கட் உபகருணங்கள் (மென்பந்து உபகருணங்கள்) எங்களிடம் எப்போதுமே இருந்தது கிடையாது.



விதிவிலக்காக எங்களது ஊரின் விளையாட்டு கழகத்திடமும், நகர பகுதி பாடசாலைக்கு படிக்கச் சென்று விடுமுறையில் ஊருக்கு வரும் ஒருசிலரிடம் மட்டுமே ஒழுங்கான கிரிக்கட் உபகருணங்கள் இருந்தன. ஆனால் அவையும் வளர்ந்தோருக்கு மட்டும் என்று முத்திரை குத்தப்படிருந்ததால் எங்களால் அதை தூர நின்று ரசிக்க மட்டுமே முடிந்தது. ஆனாலும் எங்களுக்கென நாங்கள் உருவாக்கிக்கொண்ட கிரிக்கட் உபகருணங்கள் தான் எங்களுக்கு கை கொடுத்தன. இவைதான் அனேக ஏரியா அணிகளிகளுக்கு கை கொடுத்தன.

ஆடுகளங்கள்.

எங்கள் மைதனங்கள் சந்தர்பத்திற்கு ஏற்ப வேறு படும். அனேகமாக எங்களது மைதானம் எனது வீட்டிற்கு அருகில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவில் முன்றல் தான். அது போக "புதுக்கட்டு" என்று ஒரு மைதானம் பிள்லையார் கோவிலின் அருகில் இருந்தது. அனேக நேரங்களில் அது வயதுக்குவந்தோர் வகயறாவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் எங்களுக்கு அந்த மைதானம் ஒரு கனவு தேசனாகவே இருந்தது. ஆனாலும் அவ்வப்போது பெரியவர்கள் அணியில் ஆட்கள் குறைகயில் எங்களுக்கும் அந்த மைதானத்தில் ஆடும் பாக்கியம் கிடைத்தது. ஆனாலும் எங்களது கோடையாக இருந்தது என்னவோ பிள்ளையார் கோவில் முன்றல்தான்.



அது போக "கஸ்பார் பிட்டி" என்றொரு மைதானம், இங்கு தான் ஏரியா எதிர் ஏரியா போட்டிகள் நடக்கும். எனது அப்பா எங்கள் ஊரின் விளையாட்டு கழக தலைவராக இருந்த காலத்தில் எனது வகுப்பு அனைத்துமே எங்கள் வீட்டு முற்றத்தில் படையெடுக்கும்.காரணம் எமது கழகத்தின் கிரிக்கட் உபகருணங்களில் சில எங்களுக்கும் விளையாட கிடைக்கும். அது  ஒரு மாதகாலத்திற்கு நீடித்தது. பின்பு அனைத்து உபகருணங்களும் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுவிட்டன.

ஸ்டம்புகள்.

ஸ்டம்புகள் பெரும்பாலும் நேரான பூவரசு மர தடியாகவே இருக்கும். அல்லது மீன் வலைகள் அடைக்க பயன்படும் கம்புகளாக இருக்கும். கொஞ்சம் பணக்கார ஏரியா அணியாக இருந்தால் தும்புத்தடியோ , விளக்குமாறோ சமச்சீரான அளவில் வெட்டப்பட்டிருக்கும். அதைவிட நகரில் படிக்கும் ஒருவனை கொண்ட அணியாக இருந்தால் அவர்கள்தான் பில்கேட்ஸ் அணி. மூன்று ஸ்டம்புகள் கட்டாயம் இருக்கும். ப்ந்துவீச்சாளர் பக்கத்திற்கு ஒரு செருப்பு அல்லது கல்லு அந்த பக்கத்து ஸ்டம்புகளின் கடமையை செய்யும்.வீடுகளாக இருந்தால் தூண்கள், மரங்களில் ஸ்டம்புகள் வரைந்து ஆட்டம் களைகட்டும்.

துடுப்பாட்டமட்டை.

நான் சொன்னது போல முறையான துடுப்பாட்ட மட்டைகள் எங்களது ஊர் கழகத்திடமோ அல்லது நகர பாடசாலை வாசிகளிடமோ தான் இருக்கும். அதை கண்களால் காண்பது கூட அரிது. எங்களது கோக்கபுரா, ஜி.எம், புமா, அடிடாஸ் ரக மட்டைகள் எல்லாம் பனை பட்டைகளில் சீவியனவாகவோ அல்லது பழைய முட்டை பெட்டி பலகையில் வார்த்ததாகவோ இருக்கும். அனேகமாக பனை மட்டை ரக ஆட்ட மட்டைகளே எங்களிடம் இருந்தன. அதிஷ்ரவசமாக எங்களுக்கு ஒரு துடுப்பாட்ட மட்டை கிடத்தது. ஆட்ட சுவாரசியங்களில் அதை கடித்து கடித்தே அந்த மட்டையை இல்லாதாக்கி விட்டோம். ( அதன் பலகை கடிப்பதற்கு இலகுவாக , முருங்கை மரத்தின் தன்மையை ஒத்து இருந்ததே காரணம். தூ..........!!!)



பந்து.

டென்னிஸ் பந்துகளில் ஆடுவது என்பது எங்களுக்கு  எட்டா கனி. காரணம் எங்கள் ஊரில் டென்னிஸ் பந்து ஒன்று அந்நாளிலேயே 50 ரூபாய். 16 வருடங்களுக்கு முன்னர் 50 ரூபாய் என்பது இப்போதைய 500 ரூபாய்க்கு சமம். ஆக சிறுசுகள் எங்களுக்கு அந்த தொகை வெறும் கனவு மட்டுமே. ஆனால் நத்தார், கோவில் திருநாள் நாட்களில் டென்னிஸ் பந்து ஒன்றை வாங்குமளவிற்கு பணம் சேர்ந்தாலும் கூட  நாங்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இத்தனை தொகை கொடுத்து வாங்கப்பட்டாலும் டென்னிஸ் பந்துக்கு உத்தரவாதம் கிடையாது . எப்போது வேண்டுமானாலும் மட்டையில் உதை தாளாமல் வாயை பொளந்து விடும். ஆக எங்களது அபிமானம் எல்லாம் "ஆமை பந்து" தான்.
       
       ஆமை பந்து என்பது வெறும் ரப்பர் பந்து, எந்தவித வேறு அலங்காரமுமற்ற மொட்டையான ரப்பர் பந்து. எவ்வளவு அடிபட்டாலும் நெகிழ்ந்து கொடுத்து அடி வாங்குமே ஒழிய வாயை பொளக்காது.  துடுப்பு மட்டையின் விளிம்பில் பட்டு மேலெழுந்து பின் நிலத்தில் குத்திதால் , ஒரு சுழல் சுழன்று அடிக்கப்பட்ட திசையில் களத்தடுப்பாளர் காத்திருக்க அவரை ஏமாற்றி மற்படியும் அடித்தவரின் திசைக்கே சென்று விளையாட்டை சுவாரசியமாக்க கூடியது. அவ்வளவு நெகிழ்வாக கொழ கொழவென்றிருக்கும்.............. விலை வெறும் 10 ரூபய் தான். ஆமைப்பந்தும் கிடைக்காது போனால் சைக்கிள் ரியூப்பில் லாவகமாக சுற்றப்பட்ட "ஹாண்ட் மேட்' பந்து தயாராக இருக்கும். இந்த இரண்டு பந்துகளும் ரொக்கட் வேகத்தில் செல்பவை.



ஆட்ட விதிமுறைகள்.

இங்குதான் இருக்கிறது  சுவாரசியமே.  கிரிக்கட் ஆட தொடங்கி விட்டோம் ஆனால் விதிகள் தொடர்பில் எந்தவித விளக்கமும் இல்லை சில அடிப்படை விதிகள் தவிர. தொலைக்காட்சியில் போட்டிகளை பார்த்து நாங்களாகவே விதிகளை அனுமானித்து கொண்டோம். அதுவே சரியவவும் நம்பினோம். இவ்வளவு ஏன் அதில் சில விதிகளை நான் இலங்கை நடுவர் சம்மேளன போட்டி பரீட்சையில் சித்தியடையும் வரை சரியெனவே நம்பிக்கொண்டிருந்தேன். அவ்வாறாக நாங்கள் அனுசரித்த , சரியென்று நம்பி கடைப்பிடித்த விதிகள் சில .........

1.விக்கட்டுகளால் வெற்றி.

இந்த அணி அந்த அணியை இத்தனை விக்கட்டுகளால் வென்றது என்று கேள்விப்பட்டிருந்தோமே தவிர அது குறித்த விளக்கம் எங்களிடம் இருக்கவில்லை. ஆக வெற்றி பெறுவதில் விக்கட்டுகளுக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதே எங்களது திடமான நம்பிக்கை. அந்த விதி எவ்வாறு எங்களை வெற்றி பெற வைத்தது என்று பாருங்கள்.
         
ஞாயிற்றுகிழமையானால் ஏதாவது ஒரு ஏரியா அணியுடன் பந்தயம் கட்டி "கஸ்பார் பிட்டி" சர்வதேச மைதானத்தில் போட்டி தொடங்கும். பந்தயம் பெரும்பாலும் ஒரு 1 1/2 லீற்றர் பெப்சி அல்லது மெரிண்டாவாக இருக்கும்.  நாணயசுழற்சி எல்லாம் "இன்" அல்லது "அவுட்" முறையில் தான். அதாவது விரலிடுக்கில் ஒரு சிறிய கல்லை வைத்து ஒரு அணித்தலைவர் வேகமாக கையயை சுழற்றுவார். சுழற்றும் போது சிலநேரம் யாருமறியா வண்ணம் லாவகமாக கல்லை விடுவித்து விடுவார் அல்லது விரலிடுக்கிலேயே வைத்திருப்பார். இதை எதிர் அணி தலைவர் கவனமாக கவனித்திருந்து கல் விலலிடுக்கில் உள்ளதா (இன்) , அல்லது கால் வெளியேற்றப்பட்டு விட்டதா (அவுட்) என் சொல்லவேண்டும். யூகம் சரியானால், அந்த அணி நாணய சுழற்சியில் வென்றுவிடும்.

இவ்வாறு தொடங்கும் போட்டியில் நாங்கள் தோற்று விட்டால் இருக்கிறது கச்சேரி, உடனே நாங்கள் விக்கட்டுகளால் வென்றவர்கள் ஆகிவிடுவோம். அது எப்படி என்று பார்கிறீர்களா ? எங்களை பொறுத்தவரை வெக்கட்டுகளால் வெல்வது என்பது , எந்த அணி விக்கட்டுகளை (ஸ்டம்புகள்) போட்டிக்கு கொண்டுவருகிறார்களோ அவர்கள் தான் விக்கட்டின் சொந்தகாரர்கள். ஆக விக்கட் அவர்கள் அவ்ர்களுடையது என்பதால் அவர்கள் விக்கட்டுகளால் வென்றவர்கள் ஆகிறார்கள். அனேகமாக விக்கட்டுகளை (நாங்கள் கொஞ்சம் பணக்கார அணி என்பதால் துடைப்ப தடிகளை விக்கட்டுகளாக கொடிருந்தோம்) நாங்கள் தான் கொண்டுவருவோம். ஆக வெற்றி எப்பொதும் எங்கள் பக்கம் தான். அது ரன்களாலாகட்டும், அல்லது விக்கட்டுகளாலாகட்டும்.



2.எல்.பி.டபில்யு.

எங்களது மத்தியில் இது எல்.வி என்று வழக்கிலிருந்தது. இப்போது எங்கள் மத்தியில் இருந்த எல்.வி தொடர்பான சில விதிகள் .

*ஒரு துடுப்பாட்ட வீரர் விக்கட்டுகளை கால்களால் மறைத்து நிற்கின்றார் என்று கண்டு அவரை எல்.வி மூலம் ஆட்டமிழக்க செய்யவேண்டுமென்றால் நடுவரிடம் பந்துவீசமுன்னமே , இந்த வீரருக்கு நான் இப்போது வீசப்போகும் பந்து எல்.வி க்காக வீசுகிறேன் என்று சொல்ல வேண்டும்.உடனே நடுவர் அந்தவீரரை விக்கட்டை விட்டு விலகி நிக்கும் படி பணிப்பார் (இங்கே நடுவர் அனேகமாக துடுப்பாட்ட தரப்பு வீரராக தான் இருப்பார்). அப்படி பணித்த பின்பும் அவர் விக்கட்டுகளை கால்களால் மறைத்து நிற்பதை பந்துவீச்சாளர் கண்டுவிட்டால், பந்துவீச ஓடிவரும் போதே "அம்பியார் எல்.வீவீவீவீவீவீவீவீவீவீ என்று கத்திக்கொண்டே ஓடிவந்து துடுப்பாட்ட வீரரின் காலைக்குறிபார்த்து பந்தைவீசுவார். தப்பி தவறி கூட பந்து கால்களில் பட்டுவிட்டால் கதை முடிந்தது.... நீங்கள் ஸ்டம்புகளுக்கு எத்தனை கிலோமீற்றர் தூரத்தில் நின்று உங்கள் காலில் பந்து பட்டிருந்தாலும் , நீங்க்கள் அக்குளுக்குள் துடுப்பாட்டமட்டையை வைத்துக் கொண்டு வெளியேற வேண்டியதுதான். காரணம் அந்த பந்துவீச்சாளர் அந்த பந்தை எல்.வி சொல்லி போட்டார்.

*அதே போல் மிடில் ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை நீங்கள் , உதை பந்து போல எட்டி உதைத்திருந்தாலும் , பந்துவீச்சாளர் "எல்.வி "சொலி அந்த பந்தை வீசியிருக்கவில்லையாயின் நீங்கள் தொடர்ந்தும் கம்பீரமாக கிறீசுக்குள் நிற்கலாம். எதிர் அணியின் கோபக்கணைகள் முழுதும் பந்துவீச்சாளர் மேல் பாய அவர் தலையில் கைவைத்துக்கொண்டு நிற்பார்.



*இன்னொரு முறை இருந்தது, இது துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய செய்வது. அதாவது ஒரு பந்து வீச்சாளர்  துடுப்பாட்ட வீரர் விக்கட்டுகளை கால்களால் மறைத்து நிற்கின்றார் என்று கண்டு அவரை எல்.வி மூலம் ஆட்டமிழக்க செய்யவேண்டுமென்றால் இன்னொரு தந்திரத்தையும் பயன்படுத்துவார். நடுவரிடம் ஆரம்பத்திலேயே சொல்லாமல் (சொன்னால்தான் அவன் எச்சரிக்கை பண்ணி அந்த எல்.வி யை இல்லாமல் செய்து விடுவானே) பந்து வீச ஓடிவரும்போது "அம்பியார் ஓவர் முழுக்க எல்.வீவீவீவீவீவீவீவீவீவீ " என்று கத்திகொண்டே ஒடிவந்து பந்தை போடுவார். அப்படி சொல்லிவிட்டால் முடிந்தது கதை. அந்த ஓவர் முழுவதும் துடுப்பாட்ட வீரர் கால்களை முதுகுக்கு பின்னால் ஒழித்து வைத்து ஆடவேண்டியது தான். அந்த ஓவரின் எந்த பந்து உங்கள் காலை தாக்கினாலும் , நீங்கள் காலி..! அது நீங்கள் ஸ்டம்பை விட்டு எத்தனை கி.மி தள்ளி நின்றாலும் சரி.

 இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் முன்பதிவில் எல்.வி சொல்வது. அதாவது அடுத்து பந்து வீசப்போகும் பந்துவீச்சாளர் கூட நடுவரிடம் "இவனுக்கு அடுத்த ஓவர் முழுக்க எல்.வி" என்று சொல்லி வைத்து விடுவார்கள். துடுப்பாட்ட வீரர் பொழைப்பு நாறிப்போகும். இந்த கொடுமையில் இருந்து தப்ப ஒரே வழி துடுப்பாட்ட வீரர் செய்ய வேண்டியது ஸ்டம்புகளை "பப்பரப்பே" என்று திறந்து காட்டிக்கொண்டு நிற்பது.



சுவாரசியமான விதிகள் இன்னமும் மீதமுள்ளன . பதிவு நீள்வதால் அதை பகுதி இரண்டாக நாளை தருகிறேன்..........
         
பாகம் 2 படிக்க இங்கே சொடுக்குங்கள்
http://www.kishoker.blogspot.com/2012/02/2.html

2 comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...